தலித்துகளும் மைய ஊடகங்களும்
வேர்ச்சொல்” என்ற தலித் இலக்கிய கூடுகை நிகழ்ச்சியை கடந்த ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்தது. வானம் கலைத் திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற வேர்ச்சொல் நிகழ்ச்சியின் முதல் நாளில் இரண்டு முக்கிய அமர்வுகள் இருந்தன. இந்த இரண்டு அமர்வுகளும் ஏறத்தாழ ஒரே சாராம்சத்தை கொண்டிருந்தாலும் தன்னியல்பில் அவை தனித்துவம் வாய்ந்ததாகவும்,, கடந்தகால படிப்பினைகளையும் நிகழ்கால சிக்கல்களையும் எடுத்துரைப்பவையாகவும் இருந்தது.

வேர்ச்சொல் நிகழ்ச்சியில் “நவீன யுகத்தில் தலித்துகள்” என்ற தலைப்பில் பேசிய தலித்திய எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் உடன் ஆய்வு மாணவர் மாணவர் தெய்வேந்திர குமார். புகைப்பட உதவி—ராதா பார்த்திபன்
“நவீன ஊடக யுகத்தில் தலித்துகள்” (Dalits in the age of New Media) என்ற தலைப்பில் தலித் இதழியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான பாலசுப்பிரமணியம் உரையாடினார். தமிழ் சினிமா மற்றும் பண்பாட்டு உருவாக்க ஆய்வில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் தெய்வேந்திர குமார் இந்த அமர்வை நெறியாளுகை செய்தார்.
பாலசுப்பிரமணியம் பேசும்போது, “பிரதான ஊடகங்களில் தலித்துகளுக்கு போதிய இடம் அல்லது தலித்துகளின் பங்களிப்பு முற்றிலுமாக இல்லை என்ற விஷயம் 1980—களின் இறுதியிலிருந்து பேசப்பட்டு வருகிறது. தலித்துகளின் பங்களிப்பு போதாமையால் அவர்கள் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, அப்படியே கொடுக்கப்பட்டாலும் அவை தலித் கண்ணோட்டத்தோடு (dalit consciousness) பார்க்கப்படுவதில்லை என்ற விமர்சனமும் பரவலாக வைக்கப்படுகிறது.”

தலையற்ற புத்தர் சிலையோடு தலித்திய எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் புகைப்படங்கள்—எழுத்தாளர் பாலசுப்ரமணியம் அவர்களிடமிருந்து பெறப்பட்டது.
“பிரதான ஊடகங்களில் தலித்துகளின் போதாமையை கென்னத் ஜெ.கூப்பர்தான் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார், கறுப்பினத்தவராக உள்ள கூப்பருக்கு கான்சிராம் மீது ஆங்கில ஊடகங்களும், ஹிந்தி ஊடகங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏன் இவ்வளவு மோசமான வன்மமான விமர்சனங்களை முன் வைக்கின்றன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக்கேள்விக்கு விடைதேடிய கூப்பர், “ மைய ஊடகங்களில் எத்தனை தலித் பத்திரிகையாளர்கள் இருக்கின்றனர்? என்ற ஆய்வில் இறங்குகிறார், ஆனால் அவரால் ஒரு தலித் பத்திரிகையாளரை கூட சந்திக்க முடியவில்லை. கூப்பரின் இந்த பயணத்தை தான் பி.கே. உனியால் தொகுத்து தனது தலையங்கத்தில் “தலித் பத்திரிகையாளரை தேடி—In Search of a Dalit Journalist—1996 ” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.” தொடர்ந்து பேசிய பாலசுப்ரமணியம், “ஆனால் 2010—க்கு பிறகு இந்த கட்டமைப்பு முற்றிலும் மாறியுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டிருக்கிறதாகவும், ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அதனை மீளாய்வு செய்யும் கட்டாயத்தில் நாம் தற்போது இருக்கிறோம், ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைத்துள்ள இந்த இடம் உண்மையிலேயே விடுதலைக்கான வழியா!? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
சமூக ஊடகங்களில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் குறித்து ஆழமான கருத்துக்களை முன்வைத்த பாலசுப்பிரமணியம், “தலித் என்ற அரசியல் உணர்வு கொண்ட இந்த புதிய தலைமுறைக்கு சமூக ஊடகங்கள் பெருமளவில் உதவுகிறது என்பதையும் மறுக்க முடியாது. பெருபாலான வன்கொடுமை சம்பவங்கள் சமூக வலைத்தளங்களுக்கு வந்த பின்னரே தனிக்கவனம் பெறுவதை நம்மால் சமீப காலங்களில் பார்க்க முடிகிறது” என்கிறார்.

வேர்ச்சொல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம்—க்கு நாவலாசிரியர் தமிழ் பிராபா நினைவு பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து இணையத்தில் சாதியம் எவ்வாறு இயங்குகிறது? என்பதை விளக்கிய பாலசுப்பிரமணியம், ‘Echo Chamber’ என்று சொல்லப்படுகிற ஒத்த சிந்தனையுடைய கருத்து பகிர்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. Algorithm என்று சொல்லப்படுகிற இணைய வழிமுறையும் இதன் போக்கிலே இயங்குவதால், இதை மட்டுமே ஆதாரமாக வைத்து சம காலத்தில் சாதிய புரிதல் தெளிவடைந்துள்ளது, அனைவருக்கும் சமூக புரிந்துணர்வு வந்துவிட்டது என்ற முன்முடிவுக்கு நாம் வர இயலாது.
காரணம் கடந்த முப்பது ஆண்டுகளாக கிடைத்துள்ள தரவுகளின்படி இணையத்தில் சாதியத்திற்கு ஆதரவான பதிவுகளே அதிகம் பகிரப்பட்டுள்ளது. அதற்கு அதற்கு சமீபத்திய உதாரணம், கோகுல் ராஜ் ஆணவ கொலை வழக்கில் பரோலில் வெளிவந்த “கொலையாளி” யுவராஜ் கொண்டாடப்பட்ட விதமும் ‘மாமன்னன்’ படத்தில் ’பகத் பாசிலின்’ கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பும் ஆகும்.
இந்நிகழ்வினை நெறியாளுகை செய்த தெய்வேந்திர குமார் இதன் இன்னொரு பரிணாமத்தை முன் வைக்கிறார் “தலித் பெண்களுக்கு தொழில்நுட்பங்களையோ அல்லது சமூக வலைத்தளங்களையோ பயன்படுத்துவதில் தனிச்சுதந்திரம் இருப்பதில்லை, பெரும்பாண்மையான நேரங்களில் அவர்கள் தந்தையின், சகோதரரின், அல்லது கணவரின் தலையீட்டிலோ அல்லது கண்காணிப்பிலோதான் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சூழல் இருக்கிறது” என்பதை தனது ஆய்வு முடிவிலிருந்து எடுத்துரைத்தார்.
அரசியல், சமூகம், பண்பாடு பற்றிய தலித் பெண்களின் சுகத்திரமான கருத்துகள் மிகக் குறைந்த அளவிலேயே சமூக ஊடக வெளியில் பகிரப்படுவதை இதன்மூலம் நம்மால் உணர முடிகிறது.

களப்பணியில் எழுத்தாளர் பாலசுப்பிரமணியம்.
மேலும் பாலசுப்ரமணியம் பேசுகையில்,” நாம் முழுக்க முழுக்க இணைய மயமாகி விட்டோம், நமது அனைத்து தரவுகளும் பதிவாகியுள்ளது. ஆனால் இந்தப் போக்கு “ஆட்சேர்ப்பு” (recruitment) செயல்முறையில் கூட மிகப்பெரிய சிக்கலாக உருவாகியுள்ளது. நேர்காணலின்போது பணியாளரின் தரவுகளை சரி பார்க்கும் AI Screening முறை நமது தரவுகளை, வாழ்விடத்தை, குடும்பப்பெயரை வைத்து எளிதாக சாதியை அடையாளம் காண்கிறது. எனவே நேர்காணலுக்கு முன்பே சாதியத்தின் பேரால் ஒடுக்குமுறையை சந்திக்க வாய்ப்புண்டு” என்கிறார்.
மேலும் “இயந்திரத்திற்கு தொடர்ந்து சார்புத்தன்மையான கற்றல் (machine learning biased or AI input bias) புகட்டப்பட்டு வருவதை பற்றி பேசிய பாலசுப்ரமணியம், “செயற்கை நுண்ணறிவு தானாக சாதி மனநிலையை உள்வாங்கியிருக்க முடியாது என்பதையும், பல ஆண்டுகளாக சாதிய மனநிலையோடு செயல்பட்ட ஒரு அதிகார வர்க்கம் இத்தகு தகவல்களை புகட்டியிருக்கிறது. தொழில்நுட்பத்தை, அல்லது நவீன கட்டமைப்புகளை உருவாக்கும் மனிதர்கள் சாதிய புரிதலோடு இருக்கிறார்களா? என்ற கேள்வியை நாம் மீண்டும் மீண்டும் எழுப்பவேண்டியுள்ளது” என்கிறார்.
அமர்வின் முடிவில் தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் குறியீட்டு வன்முறைகள் பற்றி விளக்கிய பாலசுப்பிரமணியம், ‘நாம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் “சாதியம்” “புரட்சி” “தலித்துகள்” உள்ளிட்ட மூல வார்த்தைகளை (key words) நாம் பயன்படுத்தும்போது அதை வைத்து நம்மை ஓரங்கட்டி விட நிறைய வாய்ப்புகள் உண்டு. நேரடி வன்முறைகளை (Road violence ) விடவும், இந்த குறியீட்டு வன்முறைகள் (symbolic violence ) தான் மைய நீரோட்டத்திலிருந்து தலித்துகளை எளிதில் விலக்கி வைக்கும் அபாயத்தை கொண்டுள்ளன. எந்த இணையம் அனைவருக்குமான தளத்தை உருவாகியதோ அதே இணையத்தில்தான் இவ்வளவு சிக்கல்கள் உள்ளன. இது எதோ வருங்காலத்திற்கான அபாய மணி அல்ல, ஏற்கனவே ‘அமெரிக்க கறுப்பின மக்கள், இணையத்தில் பல்வேறு வகையான குறியீட்டு ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர், இதற்கான பல ஆய்வுகள் நம் கண்முன்னே விரிகிறது . சாதி எதிர்ப்பு போராட்டத்தில் முழுக்க முழுக்க இணைய போராட்டம் மட்டுமே பயனளிக்காது. ஆகவே அனைத்து தளங்களையும் மிக கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு நம்மிடையே வேண்டும்” என்பதை வலியுறுத்தி இந்த அமர்வை நிறைவு செய்தார்.

வேர்ச்சொல் நிகச்சியில் பங்குபெற்ற ஊடகவியலாளர் பொன்வசந்த், சமூக செயற்பாட்டாளர் முருகப்பன் மற்றும் அமர்வை நெறியாளுகை செய்த வாசுகி பாஸ்கர் ஆகியோருக்கு ஆவணப்பட இயக்குனர் மதன் நினைவு பரிசினை வழங்கியபோது எடுக்கப்பட்டது -புகைப்பட உதவி ராதா பார்த்திபன்
இரண்டாவது அமர்வு “சமூக—அரசு வன்முறையும்: ஊடகங்கள் எதிர்கொள்ளும் விதமும்" (Social and State Violence; How Media Responds) என்பதாகும், இந்த அமர்வு ஊடகவியலாளர் பொன் வசந்த் மற்றும், தலித், ஆதிவாசி, இருளர் பாதுகாப்பு குறித்து இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளர் இரா.முருகப்பன் ஆகியோரோடு துவங்கியது.
இந்நிகழ்வினை நெறியாளுகை செய்த நீலம் மாத இதழின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர், “தலித்—ஆதிவாசி மக்கள் மீது அரசும் சமூகமும் நிகழ்த்தும் வன்முறைகளை பிரதான ஊடகங்களும், நீதிமன்றங்களும் எவ்வாறு அணுகுகிறது?என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த முருகப்பன்,

சமூக செயற்பாட்டாளர் முருகப்பன் அவர்களின் இளம் வயது புகைப்படம். புகைப்பட உதவி—சமூக செயற்பாட்டாளர் முருகப்பன்
“தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கெதிரான வன்கொடுமை சம்பவம் குறித்து ஊடகத்தில் வர வேண்டியது மிக மிக அவசியம். பெரும்பான்மையான நேரங்களில் போராட்டங்களையோ, மனுக்களையோ விட ஊடகச் செய்தி தான் அரசுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு முக்கிய உதாரணங்களையும் முருகப்பன் விளக்கினார்.

திட்டுக்காட்டூர்—தலித் மக்கள் பயன்படுத்த மறுக்கப்பட்ட பாதை.
2010—திடுக்காட்டூர் சாதிய வன்கொடுமைசம்பவம்; “25 தலித் குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள நிலங்கள் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தை சுற்றி இருந்த ஆதிக்க சாதியினர் (வன்னியர் சமூகத்தினர்) தலித் மக்கள் பயன்படுத்த பாதை விடாமல் வழியில் தென்னங்கன்றுகளை வைத்து பாதையை மறித்தனர். இதுகுறித்த செய்தி “தி ஹிந்து” ஆங்கில நாளிதழில் வெளியாகியது.
இச்செய்தி அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினின் கவனத்தை பெற்றது. உடனடியாக ஆதிக்க சாதியினரிடம் பேச்சு வார்த்தை செய்து தலித் மக்களுக்கு பாதை உருவாக்கி தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஒரு விஷயம் நல்வாய்ப்பாக தனிக்கவனம் பெற்று அந்த மக்களுக்கு வீடு கிடைத்துவிட்டது. இது போன்ற பல செய்திகள் வெளிவராமலே மறைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் நிதர்சனம்.”

மரக்காணம் கலவரத்தில் முழுவதும் எரித்து சாம்பலாக்கப்பட்ட தலித் சமூகத்தினரின் வீடு.
அடுத்தாக “மரக்காணம் கலவரம்"—2013 “ஏப்ரல் மாதத்தில் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தப்பட்டது, அதற்கு செல்லும் வழியில் இருக்கிற மரக்காணம் பகுதியில் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது, இதில் “கட்டையன் தெரு” என்கிற தலித் குடியிருப்பே எரித்து சாம்பலாக்கப்பட்டது, ஒரு அரசு பேருந்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சிகள் அன்று நேரலையில் காண்பித்தன. இந்த கலவரத்தை ஒட்டி 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன(அதில் 2 வழக்குள் தலித் மக்கள் மீதும் போடப்பட்டது). பாதிக்கப்பட்ட தலித்துகள் வன்முறையாளர்கள் மீது வழக்கு போட்டிருந்தனர் . 2016—ஆம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் தலித் மக்களின் வழக்குக்கு மாற்றாக போடப்பட்ட "எதிர் வழக்கில்” (counter case) 6 தலித் இளைஞர்கள் தண்டனை பெற்றனர். அன்று மரக்காணம் கலவரத்தை நேரலையில் காண்பித்த எந்த தொலைக்காட்சியும் இது குறித்து ஒரு செய்தி கூட போடவில்லை.”

மரக்காணம் கலவரத்தின்போது முழுவதுமாக எரிக்கப்பட்ட “கட்டையன் தெரு” தலித் குடியிருப்பு. புகைப்பட உதவி—செயற்பாட்டாளர் முருகப்பன்.
இந்தியாவில் தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை தடுக்க பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989, (SC/ ST (Prevention of Atrocities) Act, 1989) நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் தலித், ஆதிவாசி மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு விரைந்து நீதி வழங்குவதற்கான வழிவகையை செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் சமூக மறுசீரமைப்பை கட்டமைத்து தருவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் நடைமுறை வேறாகவே இருக்கிறது. எப்போது வன்கொடுமை வழக்கு பதியப்பட்டாலும் அதனை எதிர்த்து தலித்துகள் மீதே பொய் வழக்கு போடும் வழக்கம் நாடு முழுக்க உண்டு! அதுவும் சமீப காலமாக வன்கொடுமை சம்பவங்களில் அதிகளவில் தலித்துகள் மீது “எதிர் வழக்குகள்” போடப்படுகின்றன. இதை காவலர்களும் மாவட்ட நிர்வாகமுமே ஊக்குவிக்கின்றது என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம். காலங்காலமாக நீதிமன்றங்களில் தலித்துகளுக்கு கிடைப்பது “தீர்ப்பு” மட்டுமே “நீதி” அல்ல என்பதற்கு மரக்காணம் கலவரம் மிகப்பெரிய சான்று.” என்கிறார் முருகப்பன்.
இதைத் தொடர்ந்து பேசிய ஊடகவியலாளர் பொன் வசந்த், “பிரதான ஊடகங்களுக்கும் தலித் மக்களின் வாழ்வியல் சிக்கல்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், ஆனால் இங்குள்ள நடைமுறை சிக்கல்களையும் நாம் புறந்தள்ள முடியாது, மேலும் செய்தி அறைகளில் யாருடைய பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ளது? என்பதும் முக்கியம். தலையங்க முடிவு (அ) செய்தி ஆசிரியர் முடிவு என்று சொல்லப்படுகிற விஷயம் தனிநபர் சார்ந்தது அல்ல. எந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற முடிவு ஒரு நிருபர் அளவிலிருந்தே துவங்குகிறது, மேலும் திட்டமிட்டு இந்த செய்திகள் புறந்தள்ளப்படுவதாக எனக்கு தோன்றவில்லை” என்றார்.
இது குறித்து தனது கருத்தை தெரிவித்த முருகப்பன், "திட்டமிட்டு இந்த செய்திகள் புறந்தள்ளப்படுகிறது என்பதை காட்டிலும், செய்தி ஊடகங்களுக்கு “தலித் கண்ணோட்டம்—சமூக புரிந்துணர்வு இல்லை” என்பதையே இது காட்டுகிறது. மேலும் தலித் பிரச்னைகள் குறித்தும் அவர்களின் கதையாடல்கள் குறித்தும் எழுத, பத்திரிகையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வேண்டியதன் அவசியமும், தேவையும் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் தமிழ் ஊடகங்களில் தலித்துகளை தனித்து காட்டும் சொற்பதங்கள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. உதாரணத்திற்கு, விவசாயி என்றால் தலித் அல்லாதோர் விவசாய கூலி என்றால் தலித்! தொழிலாளி என்றால் தலித் அல்லாதோர், கூலித்தொழிலாளி என்றால் தலித்! இந்த போக்கில் இயங்கும் மைய ஊடகங்கள், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் சமூக—அரசு வன்முறைகளை எவ்வாறு வெளிக்கொணரும்? எவ்வாறு மக்கள் பக்கம் நின்று தங்கள் ஊடக ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்? என்ற கேள்வியையும் நம் முன்னே விட்டுச் சென்றார்.

திட்டுக்காட்டூர் தலித் பெண்கள்—நிழற்பட உதவி—செயற்பாட்டாளர் முருகப்பன்.
“வானம் கலைத்திருவிழா” குறித்து மேலும் அறிந்துகொள்ள வாசிக்க, Steevez’s essay on MKP Gridaran’s Dalit Subbaiah (2025), Sumaiya Mustafa’s two-part essay on Samuvel Arputharaj’s Manjolai (2024) and on Arun Karthik’s Nasir (2020).
மைய ஊடகங்களின் தலித்துகளின் பங்களிப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ள வாசிக்க, Ankan Kazi’s essay on Dalit Camera, reflections on Rintu Thomas and Sushmit Ghosh’s Writing with Fire (2021).